தலச்சிறப்பு |
திருமால் வாமனனாக வந்து மகாபலி தலையில் தமது திருவடிகளை வைத்து, திரிவிக்கிரமனாக அவதரித்தத் தலம். இந்த திவ்யதேசத்தில்தான், முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஓர் இரவில் திண்ணையில் ஒதுங்கி பெருமாளை சேவித்து அருள் பெற்ற தலம்.
மூலவர் திரிவிக்ரமன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், வலக்கையில் சங்கமும், இடக்கையில் சக்கரமும் தாங்கி, தமது வலது திருவடியை உயர்த்தி உலகந்த நிலை, கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் தேவநாதப் பெருமாள். கோவலன் (கோபாலன்). தாயார் பூங்கோவல் நாச்சியார் என்றும், உத்ஸவ தாயார் புஷ்பவல்லித் தாயார் என்றும் வணங்கப்படுகின்றார். பிரம்மா, இந்திரன், மகாபலி சக்கரவர்த்தி, மிருகண்டு முனிவர், காசியபர், காலவ மகரிஷி, முதலாழ்வார்கள் ஆகியோருக்கு பெருமாள் பிரத்யக்ஷம்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்று. திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை பிற க்ஷேத்திரங்கள்.
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம்.
திருமங்கையாழ்வார் 18 பாசுரங்களும், பொய்கையாழ்வார் 2 பாசுரங்களும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 21 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
|